பத்துக் கடை பாலு
by சமர்ப்பணன்
ராஜா அண்ணாமலைபுரத்திலிருந்த அந்த பிரம்மாண்டமான பங்களாவிற்குள் நான் நுழைந்தபோது, சாம்பல் நிற சீருடை அணிந்திருந்த காவல்காரர்கள் என்னைத் தடுத்து நிறுத்தவில்லை. புன்னகையோடு வணக்கம் கூறி காம்பவுண்டு கேட்டைத் திறந்து விட்டார்கள். நான் அடிக்கடி அங்கு சென்று வருபவன். அந்த பங்களா உரிமையாளரின் ஒரே செல்ல மகன் சரவணனின் ஒரே நல்ல நண்பன். பிறருக்கு உள்ள கட்டுப்பாடுகள் எனக்கு இல்லை. சுற்றுச்சுவரைக் கடந்து ஒரு நிமிடம் வேகமாக நடந்தபின் பங்களாவை அடைந்தேன். வராண்டாவில் நின்று கொண்டிருந்த இரண்டு டாபர்மென் நாய்களுக்கு பெரிய, பெரிய தட்டுகளில் உணவிட்டுக் கொண்டிருந்த வயதான சமையல்காரரான சுப்பையா, “வாங்க சந்துரு தம்பி, வாங்க, சின்னய்யா முதல் மாடியில் தூங்கிக் கொண்டிருக்கிறார், போய் எழுப்புங்கள்,” என்றார். “புதன்கிழமை காலை ஒன்பதரை மணிக்கு தூங்கிக் கொண்டிருக்கிறாரா!” என்று ஆச்சரியத்துடன் கேட்டேன். நான் பொதுவாக மாலை வேளைகளில்தான் சரவணனின் வீட்டிற்கு செல்வது வழக்கம். “அவர் எப்போதுமே பத்து மணிக்குத்தான் எழுந்திருப்பார். பதினோரு மணிக்கு காரில் ஏறி ஒவ்வொரு கடையிலும் ஐந்து நிமிஷம் தலையை காட்டிவிட்டு, ஒரு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிடுவார். மத்தியானம் நணபர்கள் வருவார்கள். சாயந்திரம் அவர்களோடு எங்காவது வெளியே போய்விட்டு பத்து மணிக்கு வந்து விடுவார், இதெல்லாம் உங்களுக்குத் தெரியாதா என்ன!” என்று கேட்டார் சுப்பையா. “தெரியாது அண்ணே, நான் பொதுவாக என்றாவது சாயந்திரம் ஆறு மணிக்கு வந்து விட்டு ஏழு மணி வரை இலக்கியம் பற்றி பேசிவிட்டு போய் விடுகிறேன், வியாபாரம் பற்றியோ மற்ற விவகாரங்கள் பற்றியோ பேசுவதில்லை,” என்றேன். “நண்பன் என்றால் உரிமையோடு எல்லாவற்றையும் தட்டிக் கேட்க வேண்டும் சந்துரு தம்பி. அம்மாவும், அய்யாவும் சரவணனைப் பற்றி கவலைப்படாத நேரமே இல்லை,” என்றார் சுப்பையா. “அவர்கள் இல்லையா!” என்று கேட்டேன். “அய்யா தினமும் காலையில் நான்கு மணிக்கெல்லாம் எழுந்து தயாராகி, பூஜை செய்து விட்டு, ஐந்து மணிக்கு கடைக்குப் போய் விடுவார். ஒரு கடையில் முக்கால் மணி நேரம் இருப்பார். பத்துக் கடைகளையும் பார்த்துவிட்டு, ஒரு மணிக்கு வீட்டுக்கு சாப்பிட வருவார். மதியம் இரண்டு மணிக்கு கிளம்பி மறுபடியும் ஒவ்வொரு கடையாக போய் கவனித்து விட்டு இரவு பத்து மணிக்கு வருவார். முப்பது வருஷங்களாக ஒரு நாள் தவறாமல் இப்படித்தான் உழைக்கிறார். சில சமயங்களில் அம்மாவும், அய்யாவோடு கடைகளுக்கு இன்று போனதுபோல போவதுண்டு,” என்றார் சுப்பையா. கடை என்று சுப்பையா குறிப்பிட்டது சிறிய பெட்டிக் கடையையோ, பலசரக்கு கடையையோ அல்ல. ஒவ்வொன்றும் மிகப் பெரிய வியாபார நிறுவனம். “அவ்வளவு நேரமா அய்யா வேலை பார்க்கிறார்! வயது என்ன இருக்கும்?” என்று கேட்டேன். “வருகிற கார்த்திகையில் எழுபது நிறைந்துவிடும். இருபது வயது பையன் போல வேலை பார்க்கிறார். நம் குலக்கொழுந்துக்கு இருபதிலேயே இருநூறு வயதானது போல தள்ளாமை வந்து விட்டது! உங்களைப் போலக் கூட்டாளிகள்தான் எடுத்துச் சொல்லி திருத்த வேண்டும்,” என்றார் சுப்பையா. நான் மௌனமாக இருந்தேன். “சந்துரு தம்பி, இருநூறு கோடி ரூபாய் சொத்துக்கு ஒரே வாரிசாக இருந்து கொண்டு ஒன்றுமே செய்யாமல் பணத்தை அனுபவித்துக் கொண்டிருப்பது சரிவருமா? அருப்புக்கோட்டையிலிருந்து உடுத்திய ஒரே கிழிந்த வேட்டியோடு சென்னைக்கு வந்தவர் அய்யா. இத்தனை சொத்தும் அவருடைய உழைப்பால் வந்தது. அவர் பையன் இப்படி இருக்கலாமா?” என்றார் சுப்பையா. “அப்பா கடுமையாக உழைத்து சம்பாதிப்பார், பிள்ளை தண்டமாக இருந்து செலவழிப்பார், என்பது உலகம் முழுவதும் இருப்பதுதானே! நீங்கள் சொன்னது போல் உழைப்பால் பணம் வரும்தான். ஆனால் இவ்வளவு பணம் வர வேண்டுமென்றால், உழைப்பு மட்டுமே போதாது,” என்றேன். “சத்தியவாக்கு! இந்த நாற்காலியில் உட்காருங்கள் தம்பி, அய்யாவின் கதையை சொல்கிறேன். நான் கூடவே இருந்து அவர் வளர்ச்சியை பார்த்தவனாச்சே,” என்றார். நான் நாற்காலியில் உட்கார, சுப்பையா வராண்டா படியொன்றில் உட்கார்ந்து கொண்டார். நாய்கள் சாப்பிட்டு முடித்து விட்டன. இரவு முழுவதும் கண் விழித்திருந்த நாய்கள் ‘ஏனப்பா, நீங்கள் இரண்டு பேரும் தொணதொணவென்று பேசி எங்கள் தூக்கத்தைக் கெடுக்கிறீர்கள்?’ என்பது போல எங்களை அரைக்கண்ணால் பார்த்துவிட்டு வராண்டா ஓரத்தில் சாய்ந்து தூங்க ஆரம்பித்தன. “ஐம்பது வருடங்களுக்கு முன்னால் நான் சின்ன பையன். மாம்பலத்தில் முருகன் மளிகைக் கடையில் எடுபிடி ஆளாக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் காலையில் அய்யா அங்கு வந்து கடை முதலாளியைப் பார்த்தார். அப்போது அவர் பெயர் பாலு, அய்யா இல்லை. அய்யாவுக்கு பதினெட்டு இருபது வயதிருக்கும். பார்ப்பதற்கு பதினைந்து வயது பையன் போலத்தான் இருப்பார். மூன்று நாளைக்கு ஒரே ஒரு வேளை சாப்பிட்டால் வளர்ச்சி எப்படி வரும்? மெலிந்த உடலும் கிழிந்த வேட்டியுமாக பார்க்க பரிதாபமாக இருந்தார். முதலாளி மூன்று கேள்விகள் கேட்டார். என்ன ஜாதி’? எந்த ஊர்? ஊரில் உன் சம்பளத்தை நம்பி வாழும் குடும்பம் உண்டா? அய்யாவின் பதில்களை கேட்ட முதலாளிக்கு பூரண திருப்தி. உடனே சாப்பாடு போட்டார். இரண்டு புதிய வேட்டிகளும், சட்டைகளும் வாங்கித் தந்தார். கொஞ்சம் பணம் தந்து உடனே ஊருக்கு அனுப்பி வைக்கச் சொன்னார். கடையிலேயே தங்கிக் கொள்ளச் சொன்னார். அய்யாவால் பேசவே முடியவில்லை. ‘முதலாளி, முதலாளி’ என்று சந்தோஷத்தில் தத்தளிக்கிறாரே தவிர வேறு வார்த்தை அவர் வாயில் வரவே இல்லை,” என்றார் சுப்பையா. “முதலாளி கெட்டிக்காரர்தான்,” என்றேன். “அதிலென்ன சந்தேகம்? அன்றிலிருந்து உழைக்க ஆரம்பித்த அய்யா இன்று வரை நிறுத்தவில்லை. தொழிலை ரொம்பவும் கவனமாக கற்றுக் கொண்டார். முதலாளியின் கடையை ஏதோ தன் சொந்த கடை போல நினைத்து வேலை பார்த்தார். அதுவரையிலும் வரவுக்கும், செலவுக்கும் சரியாக ஓடிக் கொண்டிருந்த கடை ஒரு வருஷத்திற்குள் பிரமாதமாக வளர்ந்துவிட்டது. சைக்கிளில் வந்து போய் கொண்டிருந்த முதலாளி கார் வாங்கலாமா என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். முருகன் மளிகைக் கடையின் வளர்ச்சிக்கு அய்யாதான் காரணம் அவர் உழைப்பு மட்டும்தான் காரணம்,” என்றார் சுப்பையா. “முதலாளி கார் வாங்கினாரா இல்லையா?” என்று கேட்டேன். “கார் வாங்கினார். ஒரே வருஷத்தில் வாங்கிய காரை கடையோடு விற்கும் நிலைக்கும் வந்து சேர்ந்தார். ஊர் விட்டு ஊர் வந்து தொழில் செய்யும் போது பணம் வெள்ளமாக கையில் புரண்டு ஓடினால் என்னென்ன பழக்கவழக்கங்கள் வருமோ அத்தனையும் முதலாளிக்கு வந்துவிட்டது. அய்யா வந்து சேர்ந்து இரண்டாவது வருஷம் முடிவதற்குள் முதலாளி திவாலாகும் நிலைக்கு வந்து விட்டார்.” என்றார் சுப்பையா. “என்னதான் ஆண்டவன் மேலிருந்து அருளை மனிதன் தலைமேல் கொட்டினாலும் அவன் ஓட்டையாக இருந்தால் நையா பைசா நிற்காதே!” என்றேன். “வாஸ்தவம்தான். கடன்காரர்களின் தொந்தரவு தாங்க முடியாமல் முதலாளி ஒருநாள் எல்லோரையும் கூப்பிட்டனுப்பினார். ‘என் போதாத காலம், என்னென்னவோ நடந்து விட்டது. இப்போது இந்தக் காரும், கடையும், இதிலிருக்கும் சரக்குகள் மட்டும்தான் என் சொத்து. இதை நீங்கள் எல்லோரும் பிரித்துக் கொள்ளுங்கள். நான் சொந்த ஊருக்குத் திரும்பிப் போய் கோவில் பிரசாதம் சாப்பிட்டு என் எஞ்சிய காலத்தை ஒட்டப் போகிறேன்’ என்றார். ‘கடையை பிரித்தால் கொடுத்த கடனில் மூன்றில் ஒரு பங்கு கூட தேறாதே’ என்று எல்லா கடன்காரர்களுக்கும் ஒரே கோபம். வாய்க்கு வந்தபடி பேசினார்கள். முதலாளி ஒன்றுமே பேசாமல் சும்மா இருந்தார். அப்போதுதான் ஒரு நாளைக்கு நாலைந்து வார்த்தைகள் மட்டுமே பேசும் அய்யா முதலாளியைப் பார்த்து ஒரு யோசனை சொன்னார்.” என்றார் சுப்பையா. “என்ன யோசனை?” என்று கேட்டேன். “முதலாளியிடம் அய்யா ‘கடை நன்றாக நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும் கடன்காரர்கள் ஒப்புக்கொண்டால் உங்கள் கடன் மொத்தத்திற்கும் நான் பொறுப்பெடுத்துக் கொள்கிறேன். நான் கடையை நடத்துகிறேன். உங்கள் செலவுக்கு மாதம் ஒரு தொகையை அனுப்பி வைக்கிறேன். நீங்கள் நிம்மதியாக ஊருக்குப் போங்கள்’ என்றார். அய்யாவைப் பற்றி எல்லோருக்கும் தெரியும் என்பதால் உடனே அந்த யோசனையை மறுபேச்சில்லாமல் ஒப்புக் கொண்டார்கள். முதலாளி கடனிலிருந்து விடுபட்டார். அய்யா கடனாளியானார்,” என்றார் சுப்பையா. “அய்யா ஏன் அப்படிச் செய்தாராம்?” என்று கேட்டேன். “ஒரு வாய் சோற்றுக்கு வழியில்லாமல் வாசலில் வந்து நின்றபோது தனக்கு மட்டுமல்லாமல் தன் குடும்பத்திற்கும் சோறு போட்டவருக்கு, தனக்கு தொழில் சொல்லித் தந்த குருவிற்கு, நன்றி காட்டும் விதமாக அப்படிச் செய்தார். முதலாளி கல்லாப் பெட்டியிலிருந்த எல்லா பணத்தையும் எடுத்துக் கொண்டு, வெறும் பெட்டியைப் பூட்டி சாவியை அய்யாவிடம் கொடுத்தார். ‘கொடுத்த வாக்கை காப்பாற்று, மாதாமாதம் ஏதாவது பணம் அனுப்பு,’ என்று கூறிவிட்டு காரில் ஊருக்குச் கிளம்பிப் போனார்,” என்றார் சுப்பையா. `தங்கமான முதலாளி” என்றேன். சிரித்தார் சுப்பையா. “அன்றிலிருந்துதான் பாலுவாக இருந்தவர், எங்களுக்கெல்லாம் அய்யாவாகி விட்டார். லாபமாக வந்த ஒவ்வொரு ரூபாயையும் கடனுக்குத் திருப்பிக் கட்டினார். இரண்டே வருஷத்தில் எல்லாக் கடன்களையும் திருப்பிக் கட்டி விட்டார். தனக்கென்று ஒரே ஒரு ரூபாய் கூட ஒதுக்கிக் கொள்ளவில்லை. பண்டிகை வந்தால் கடையில் வேலை பார்த்தவர்களுக்கு துணிமணி எடுத்துத் தருவார். ஊருக்குப் போக வர தாராளமாக பணம் தருவார். ஆனால் கடனைத் திருப்பிக் கட்டும் வரை தனக்கு ஒரு புது வேட்டி கூட எடுத்துக் கொள்ளவில்லை. புதிதாக கடைக்கு வருபவர்களுக்கு எங்களைப் பார்த்தால் முதலாளி போலவும் அவரைப் பார்த்தால் வேலைக்காரர் போலவும் தோன்றும்,” என்றார் சுப்பையா. “கடன் கட்டி முடித்த பின்பு அய்யா என்ன செய்தார்?” என்று கேட்டேன். “அய்யா ஒன்றும் செய்யவில்லை பழைய முதலாளிதான் விஷமம் செய்தார். எல்லா பிரச்சனைகளும் தீர்ந்தபின் ஒரு நாள் ஊரிலிருந்து கிளம்பி மிடுக்காக கடைக்கு வந்தார். “பாலு, கடை எப்படி நடக்கிறது?” என்று விசாரித்தார். அய்யா ரொம்ப பணிவாக அவரை வரவேற்று உபசரித்தார். ‘உன்னைப் பற்றி பிரமாதமாக நினைத்து உன்னிடம் கடையை பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு ஊருக்குப் போனேன். பல வருஷங்களாகியும் கடை அப்படியேதான் இருக்கிறது. ஒரு முன்னேற்றமும் இல்லையே!’ என்று கூசாமல் சொன்னார். ‘முயற்சி பண்ணிக் கொண்டே இருக்கிறேன் முதலாளி’ என்றார் அய்யா. ‘நீ பார்த்தது போதுமப்பா, இனிமேல் நானே பார்த்துக் கொள்கிறேன்’ என்று நைச்சியமாகச் சொன்னார் முதலாளி. அந்த அநியாயத்தைப் பார்த்து கடைத் தெருவே கலகலத்து விட்டது. ‘உனக்கு மூன்று நாட்கள் தருகிறேன். அதற்குள் எல்லா கணக்கையும் எழுதி நல்லநேரம் பார்த்து கடையை ஒப்படைத்துவிடு,’ என்று கூறி விட்டுக் கிளம்ப யத்தனித்தார் முதலாளி.” என்றார் சுப்பையா. “பணத்திற்காக மனிதன் எதை வேண்டுமானாலும் பேசுவான்,” என்றேன். “அப்போது அய்யா அதிசயமான காரியம் செய்தார். ‘முதலாளி, நீங்கள் வந்ததால் நேரம் நல்ல நேரமாகி விட்டது. இப்பொழுதே கடையை அப்படியே எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறி பணத்தால் நிரம்பி வழியும் கல்லாப்பெட்டி சாவியை முதலாளியிடம் நீட்டினார். நான் அதைத் தடுத்தேன். ‘அய்யா அவசரப்படாதீர்கள். பழைய முதலாளி கேட்டது தர்மப்படியும், சட்டப்படியும் தப்பு. கடை உங்களுடையது. நீங்கள் ஒரு வார்த்தை சொல்லுங்கள். அநியாயம் செய்யும் இவரை அடித்து விரட்டி விடுகிறேன்’ என்றேன். ‘அப்படியெல்லாம் பேசாதே. எனக்கு நடப்பது அத்தனையும் நியாயமானதே. என்னிடம் எத்தனை உரிமையோடு முதலாளி கடையை திருப்பித் தரச் சொல்கிறார்! என்னைத் தவிர வேறு யாரிடம் அவரால் இப்படிக் கேட்க முடியும்? அவர் எனக்கு செய்திருப்பதற்கு பிரதியுபகாரமாக எதை வேண்டுமானாலும் செய்யலாம். முதலாளி தான் ஆரம்பித்த கடையைத்தான் கேட்கிறார். உயிரையா கேட்டார்? அதைத் தருவதில் எனக்கு பூரண சம்மதம். பூரண சந்தோஷம்,’ என்று கூறி சாவியை கொடுத்துவிட்டு, கடையை விட்டு வெளியே வந்தார். நானும் அவர் கூடவே வெளியே வந்து விட்டேன்,” என்றார் சுப்பையா. “அந்தக் கடையிலேயே மேற்கொண்டு ஏன் அய்யா வேலை பார்க்கவில்லை?” என்று கேட்டேன். “இதே கேள்வியை அப்போதே நான் அய்யாவிடம் கேட்டேன். ‘என்னதான் நான் கடையை சந்தோஷமாகத் தந்திருந்தாலும், இவன் ஏன் இப்படி விட்டுக் கொடுத்தான் என்று முதலாளிக்கு சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும் அவரால் நிம்மதியாக இருக்கவே முடியாது. நான் வெளியே போகிறேன் என்றதும் அவர் முகத்தில்தான் எவ்வளவு சந்தோஷம்! எனக்காக குரல் கொடுத்த நீயும் வெளியே போகிறேன் என்றதும் அவருக்கு இரட்டிப்பு சந்தோஷம் வந்துவிட்டதே!’ என்றார் பெறுபவன் சந்தோஷப்படவேண்டுமே என்று கொடுப்பவன் கவலைப்படும் காட்சியை. அன்றுதான் முதல் முறையாக பார்த்தேன்,” என்றார் சுப்பையா. “அதை வேறுவகையாகவும் பார்க்கலாம். துரோகம் செய்தவர்களுடைய தொடர்பை விலக்கிக் கொள்வது நல்லது,” என்றேன். “அய்யா ஒருபோதும் எவரையும் துரோகி என்று நினைத்ததே இல்லை. துரோக புத்தி இருப்பவனுக்குத்தான் விசுவாசி, துரோகி என்ற பேதமெல்லாம் இருக்கும்,” என்றார் சுப்பையா. “சரி, சரி! நானும் யாரையும் துரோகியாக நினைக்கவில்லை,” என்றேன். “அய்யா சந்தோஷமாக இருந்தார். அவர் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து நானும் சந்தோஷமாக இருந்தேன். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நடைபாதையில் நின்று கொண்டிருந்தோம். அப்போது முருகன் மளிகை கடைக்கு எதிர்சாரியில் துணிக்கடை வைத்திருந்த செட்டியார், அய்யாவை தன் கடைக்குள் கூப்பிட்டார். ‘தம்பி, நீ வந்தது முதல் உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் தியாகராய நகரில் ஒரு பெரிய துணிக்கடை ஆரம்பிக்கப் போகிறேன். நீ அந்த கடையில் கூட்டாளியாக சேர்ந்து கொள். பாதி பங்கு தருகிறேன். மாத சம்பளமும் எடுத்துக் கொள். வக்கீல் ஆடிட்டரையெல்லாம் கலந்து பேசி முறைப்படி எல்லாவற்றையும் எழுதி செய்யலாம்’ என்றார். அய்யா, ‘நான் பலசரக்குக் கடை நடத்தியவன், துணிக்கடை என்கிறீர்களே’ என்றார். ‘நிர்வாகத்திறன் இருந்தால் எந்தத் தொழிலையும் செய்யலாம். தொழில் விவரங்களைத் தெரிந்து கொள்ள எத்தனை நாளாகப் போகிறது?’ என்று உற்சாகப்படுத்தினார் செட்டியார். அப்புறம் புதிய துணிக்கடை பெரிய அளவில் வளர்ந்து விட்டது. செட்டியாருக்கு வாரிசில்லை. கடைசி காலத்தில் ஒரு பெரிய தொகையை வாங்கிக் கொண்டு இரண்டு கடைகளையும் அய்யாவிடமே தந்து விட்டார். அதற்கடுத்த எட்டு வருஷங்களில் அய்யா வருஷத்திற்கு ஒரு புதிய கடை என்று எட்டு கடைகளை ஆரம்பித்து பத்துக் கடை பாலு ஆகிவிட்டார். வருமான வரி கணக்குப்படி இருநூறு கோடி சொத்து இருக்கிறது. உண்மையான மதிப்பு அதைவிட பல மடங்கு கூடத்தான் இருக்கும்,” என்றார் சுப்பையா. நான் பிரமித்து உட்கார்ந்திருந்தேன். சிறிது நேரம் கழித்து “அய்யா என்ன படித்திருக்கிறார்?” என்று கேட்டேன். “ஆறாவது வரை படித்திருக்கிறார். அதற்கப்புறம் வாழ்க்கைதான் அவருக்கு பள்ளிக்கூடமாகிவிட்டது,” என்ற சுப்பையா தொடர்ந்து சொன்னார். “அய்யா எனக்கு கல்யாணம் பண்ணி வைத்து, மகனைப் படிக்க வைத்து, வீடெல்லாம் வாங்கித் தந்திருக்கிறார். பிள்ளை அமெரிக்காவில் வேலை பார்க்கிறான். அவன் அம்மாவும் அங்கேதான் இருக்கிறாள். நான்தான் அய்யாவை விட்டுப் போக மனமில்லாமல் இங்கேயே தங்கி விட்டேன்.” மெல்ல எழுந்த முதல் நாய் எங்கள் இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, மீண்டும் படுத்துக் கொண்டது. அப்போது மாடியிலிருந்து சரவணன் கொட்டாவி விட்டுக் கொண்டே இறங்கி வந்தான். “வாப்பா சந்துரு! புருஸ்லீ நடித்த படம் ஒன்று திரும்பவும் வந்திருக்கிறதாம். காலை காட்சிக்கு போகலாமா?’ என்று கேட்டான். “நீ கடைகளுக்குப் போய் வியாபாரத்தைப் பார்க்க வேண்டாமா?” என்று கேட்டேன். “அதெல்லாம் அய்யா பார்த்துக் கொள்வார்,” என்றான் சரவணன். (முற்றும்)