மூன்று குரங்குகள்
by சமர்ப்பணன்
சந்துருவின் பிறந்த நாளுக்கு கமலா டீச்சர் மூன்று குரங்கு பொம்மைகளைப் பரிசாகத் தந்தார். முதல் குரங்கு கண்களை அகலமாக திறந்து விழித்துப் பார்ப்பது போலிருந்தது. இரண்டாவது குரங்கு இரண்டு காதுகளையும் விரித்து வைத்து கூர்ந்து கவனிப்பது போலிருந்தது. மூன்றாவது குரங்கு சிரித்தபடி வாயைத் திறந்து பேசுவது போலிருந்தது. சந்துருவிற்கு ஒன்றும் புரியவில்லை. “மிஸ், கெட்டதைப் பார்க்காதே, கெட்டதைக் கேட்காதே,கெட்டதைப் பேசாதே என்பதற்காக, கண்களையும், காதுகளையும், வாயையும் மூடிய குரங்கு பொம்மைகளைத்தான் பார்த்திருக்கிறேன். இந்தக் குரங்குகள் ஏன் வேறு மாதிரி இருக்கின்றன?” என்று கமலா டீச்சரிடம் கேட்டான். “சந்துரு கண்ணா, காலம் இப்போது மாறிவிட்டது. நாம் எப்போதும் மற்றவர்களிடம் உள்ள எல்லா நல்லவற்றையும் கவனமாகப் பார்க்க வேண்டும், மற்றவர்கள் கூறும் எல்லா நல்லவற்றையும் எப்போதும் காது கொடுத்து கவனமாகக் கேட்க வேண்டும். மற்றவர்களிடம் எப்போதும் சிரித்துக் கொண்டே நல்லவற்றை இனிமையாகப் பேசவேண்டும் என்பதைத்தான் இந்தக் குரங்குகள் குறிக்கின்றன,” என்றார் கமலா டீச்சர். அன்றிலிருந்து சந்துரு மற்றவர்களிடம் உள்ள எல்லா நல்லவற்றையும் கவனமாகப் பார்த்தான், பிறர் கூறும் எல்லா நல்லவற்றையும் முழுமையாகக் காது கொடுத்து கேட்டான், எல்லோரிடமும் இனிமையாக நல்லவற்றைப் பேசினான்.